×

சிவகங்கை அருகே பிஜப்பூர் சுல்தான்கள் கால நாணயங்கள் கண்டெடுப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான்கள் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா மற்றும் சரவணன் ஆகியோர் அரசனேரி கீழமேடு பகுதியில் மூன்று உலோகச் சில்லுகளைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் முனிக்கோவில் பகுதியில் வித்தியாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்தன. இவை செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் முன்னும் பின்னுமாக அடையாளங்கள் இருந்தன. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு நாணயங்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இவற்றை ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தவை என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜப்பூரைத் தலைநகராக கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராஷ்டிரப் பகுதியையும் 1490லிருந்து 1686 வரை ஆண்டவர்கள் பிஜப்பூர் சுல்தான்கள். 1490ல் பாமினி, சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இங்கு கிடைத்த நாணயங்கள் செம்பால் ஆனதோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. ஒரு நாணயத்தில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப்பட்டுள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீகத்தில் எழுதப்பட்டுள்ளன.

இவை இப்பகுதி ஆளுகையில் இருந்த மன்னர்களின் நிர்வாகத்திற்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ வந்திருக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நாணயங்கள் இழுத்து வரப்படுவதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்துள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான நாணயங்கள் கிடைப்பது அரிது.இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Bijapur ,Sultans ,Sivagangai , Sivagangai: Coins from the time of Bijapur Sultans were found in the lower part of Arasaneri near Sivagangai.
× RELATED சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சரண்